டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், பொதுச்செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
Email : daseindia@gmail.com, website : www.daseindia.org
________________________________________________________________________________சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
# 41,சாவடித்தெரு, பல்லாவரம், சென்னை -43
தொலைநகல்: 044 - 22643562 கைபேசி : 99406 64343, 94441 83776
Email : daseindia@gmail.com, website : www.daseindia.org
கட்டுரை தேதி :3.2.09
யாருக்காக மருத்துவர்களின் கட்டாய சேவை ?
தமிழக மருத்துவ மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொண்டுள்ளனர்.ஈழத் தமிழர் பிரச்சனையும் உச்சக்கட்டத்தில் உள்ளது. மருத்துவ மாணவர்கள் போராட்டம் எதுவும் நடத்தமுடியாத சூழல்.இதைப் பயன்படுத்திக் கொண்டு கட்டாயச் சேவைத் திட்டத்தை மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை நயவஞ்சகமாக மீண்டும் திணிக்கிறது.
கட்டாய சேவைத் திட்டத்தை எதிர்த்து மருத்துவ மாணவர்கள் தமிழகம் முழுவதும் போராடினார்கள்.இடதுசாரிகள் ஆதரவு தந்தனர்.'மருத்துவர்கள் கிராமப்பு றங்களில் சேவை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது;ஆனால் மருத்துவப்படிப்பின் காலம் அதிகப்படுத்தப்படுவது சரியல்ல. இப்பிரச்சனையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கூறும் கருத்தே எனது கருத்தும். அமைச்சர் அன்புமணி போராடும் மாணவர்களை அழைத்துப்பேசி பிரச்சணைக்கு சுமூகத் தீர்வு காணவேண்டும்' என தமிழக முதல்வர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
இதைத் தொடர்ந்து மருத்துவ மாணவர்களுடன் பேச்சுவார்த்தை என்ற கண்துடைப்பு நாடகத்தை சென்னையில் அரங்கேற்றினார் அமைச்சர் அன்புமணி. 'மாணவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டேன். இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உரிய தீர்வுகாணப்படும் என பேச்சுவார்த்தையின் முடிவில் வசனங்களை உதிர்த்தார்' ,அவர். மகிழ்ந்து போனார்கள் மாணவர்கள்.இவையெல்லாம் நடைபெற்றது முதல்கட்டப் போராட்டத்தில்.
அடுத்த ஒருவார காலத்திற்குள் டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டாக்டர் அன்புமணி ராமதாஸ் கட்டாயசேவைத் திட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.கொதித்தெழுந்த மாணவர்கள் இரண்டாம் கட்டப் போராட்டத்தை துவங்கினர். ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் மீது திரும்பியது.இம்முறை பாட்டாளி மக்கள் கட்சி நீங்கலாக அனைத்துக் கட்சியினரும் மாணவர்கள் பக்கம் நின்றனர்.அன்புமணிமட்டுமல்ல அவரது கட்சியும் தனிமைபடுத்தப்பட்டது.
இம்முறை போராட்டத்தை மழுங்கடிக்க புது வியூகத்தை வகுத்தார் அன்புமணி.மாணவர்களால் கோரப்படதா ஓர் குழுவை நியமித்தார்.இப்பிரச்ணை பற்றி கருத்தறிந்து பரிந்துரைகளை வழங்கும் என கூறப்பட்டது.டாக்டர் சாம்பசிவராவ் தலைமையில் அமைக்கப்பட்ட அக்குழுவில் இடம் பெற்றவர்கள் அனைவரும் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறையில் அமைச்சர் அன்புமணிக்குக் கீழ் பணியாற்றக்கூடிய அதிகாரிகளே.அக்குழு சுதந்திரமாக.நடுநிலையாக செயல்படாது என எதிர்ப்புகள் எழுந்தன.மாணவர்கள் இக்குழுவை புறக்கணித்தனர்.சென்னையில் இக்குழுவை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர்.தமிழக முதல்வர் அளித்த உறுதி மொழியை ஏற்று மாணவர்கள் பல நாள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
முக்கிய நகரங்களில் மட்டும் கருத்தைக் கேட்டறிந்தது டாக்டர் சாம்பசிவராவ் குழு.பெரும்பாலோர் இத்திட்டத்திற்கு எதிராகவே கருத்துக்கூறினர்.இக்குழுவின் செயல்பாடு வெளிப்படை யுடன் இல்லை. அதன் பரிந்துரைகளும் வெளியிடப்பட வில்லை ;விவாதிக்கப்பட வில்லை.அமைச்சர் அன்புமணி என்ன செய்ய நினைத் தாரோ அதுவேதான் அக்குழுவின் பரிந்துரையாகவும் வந்திருக்கும்.இது ஊர் அறிந்த உண்மை.மற்றுமொறு நாடகம் ,அவ்வளவு தான்.
டாக்டர் சாம்பசிவராவ் குழுவின் பரிந்துரைப்படி கிராமப்புற கட்டாய சேவை கொண்டுவரப்படும் என டாக்டர் அன்பு மணி மீண்டும் அறிவித்துள்ளார்.ஏற்கனவே அறிவிக்கப்பட்டத் திட்டத்திற்கும் இப்பொழுது டாக்டர் சாம்பசிவராவ் குழுவின் பரிந்து ரைப்படி அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை.
முந்தைய திட்டத்தின்படி எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தவுடன் சான்றிதழ் வழங்கப்படமாட்டாது.மருத்துவக் கவுன்சிலிலும் பதிவு செய்யமுடியாது.தற்காலிகப் பதிவின் மூலம் ஓராண்டு கட்டாய சேவை செய்ய வேண்டும். அதாவது பயிற்சி மருத்துவராக (ஹவுஸ் சர்ஜனாக) ஓர் ஆண்டிற்குப்பதிலாக இரண்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டு மென்பதுதான்.இப்பொழுது உள்ள திட்டத்தின் படி எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும். மருத்துவக் கவுன்சி லிலும் பதிவு செய்து கொண்டு மருத்துவராக தொழில் செய்யலாம்.ஆனால் முது நிலை மருத்துவக் கல்வி பயில விண்ணப்பிக்க வேண்டுமெனில் ஓராண்டு கட்டாய சேவை முடிதுள்ளதாக சான்றிதழ் வழங்க வேண்டும்.நேரடி திணிப்புக்குப்பதில் மறைமுகத் திணிப்பு , அவ்வளவுதான்.
தொழில் போட்டியும், மருத்துவ தொழில் நுட்பமும் மிகுந்த இன்றைய காலக் கட்டத்தில் வெறும் எம்,பி.பி.எஸ் படிப்பு மட்டுமே போதாது. முதுநிலை மருத்துவக் கல்வியும், உயர் சிறப்பு மருத்துவமும் பயில வேண்டும் என்ற கட்டாய நிலை உள்ளது.இதைப் புரிந்து கொண்டு முதுநிலை மருத்துவக் கல்வியை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்த முயல்கிறார்கள். மறைமுகமாக கட்டாயச் சேவையை கட்டாயப் படுத்துகிறார்கள்.இதுவும் இளம் டாக்டர்களை பாதிக்கக்கூடியதே.மருத்துவ மாணவர் களின் உணர்வுகளை அலட்சியப் படுத்தி தனது நிலையில் பிடிவாதமாக உள்ளார் டாக்டர் அன்புமணி.
கட்டாய கிராமப்புற சேவைத் திட்டத்தின் நோக்கம் என்ன? அதில் நியாயம் உள்ளதா? அதை மாணவர்கள் எதிர்ப்பதேன்?கிராமப்புற மக்களுக்கு இத்திடம் உதவுமா? மருத்துவர்கள் இன்றி அவதிப்படும் கிராமப்புறங்களுக்கு மாற்றுதான் என்ன? மருத்துவர்கள் கிராமப்புற மக்களை புறக்கணிப்பது சரியா? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.
முதலில் தெளிவுபடுத்தப்பட வேண்டியது இத்திட்டம் கிராமப்புற சேவைத் திட்டமே அல்ல. ஏனெனில் இத்திட்டத்தின மூலம் 4 மாதங்கள் மாவட்ட மருத்துவ மனைகளிலும் 4 மாதங்கள் வட்டார மருத்துவமனைகளிலும் ,4 மாதங்கள் மட்டுமே ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பணியாற்ற வேண்டும் .மாவட்ட, வட்டார மருத்துவமனைகள் நகர்புறங்களில்தான் உள்ளன.பல ஆரம்ப சுகாதார நிலையங்களும் நகராட்சிப் பகுகளிலேயே உள்ளன.எனவே இதை கிராமப்புற சேவை என்பது ஏமாற்று வேலை.
கிராமப்புற சேவை என்ற மக்களை கவரும் சொல்லை பயன்படுத்துவது ஒரு சிறந்த யுத்தி. கிராமப்புறங்களுக்கு டாக்டர்கள் போக மறுக்கிறார்கள் ,எனவே தான் கட்டாய கிராமப்புற சேவை என எளிதாக பிரச்சாரம் செய்யலாம். இத்திட்டத்தை எதிர்ப்வர்களை கிராமப்புற மக்களுக்கு எதிரானவர்கள் என எளிதாக முத்திரை குத்திவிடலாம். இந்த வகையில் இந்த பெயர் ஓரளவிற்கு இந்தத் திட்டத்தை திணிக்க பயன்பட்டுள்ளது.
கட்டாய சேவை என்பது உண்மையில் ஒரு சேவையுமல்ல.சேவை என்பது தானாக முன்வந்து சுய விருப்பத்தின் பேரில் செய்வது.உலக வர்த்தக கழகத்தின் நிர்பந்தத்தால் சேவைத்துறைகளில் வர்த்தகம் செய்வதற்கான பொது ஒப்பந்தத்தில்-காட்ஸ் (General Agreement on Trade in Services) கையெழுத்திட்டுள்ளது இந்தியா. இதன் மூலம் கல்வி,மருத்துவம்,குடிநீர் விநியோகம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சேவைத்துறைகளை வியாபாரமாக்கிவிட்டது. மருத்துவத்தை பன்னாட்டு நிறுவனங்களின் வியாபாரச் சந்தையாக்கிவிட்டு சேவை என்ற வார்த்தையை சொல்வதே கேவலமாக உள்ளது.தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஏராளமாக தொடங்க அனுமதித்துவிட்டு ,கல்வியை வியாபாராமாக்கிவிட்டு,சேவையைப்பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.மருத்துவர்களிடம் சேவை மனப்பான்மை குறைந்ததற்கும் அரசுதான் காரணம்.
எனவே,இத்திட்டத்தை கட்டாய சேவை என்பதைவிட குறைந்த ஊதியத்தில் தற்காலிக அடிப்படையில் கட்டாயப்படுத்தி வாங்கப்படும் வேலை என்பதுதான் சரி.உழைப்புச் சுரண்டல் என்பதுதான சரி. இத்திட்டம் மூலம் இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் இன்றைய நிலையில் படித்து முடித்து வெளிவரக்கூடிய 32 ஆயிரம் டாக்டர்கள் ஓர் ஆண்டு காலத்திற்கு சுழற்சி அடிப்படையில் ஏற்கனவே குறிப்பிட்ட மருத்துவமனைகளில் வேலை செய்வார்கள். மாதம் தோறும் அவர்களுக்கு வெறும் ரூபாய் 8 ஆயிரம் மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்படும். அவர்கள் ஓராண்டு பணியை முடித்தவுடன் அடுத்த ஜூனியர் பேட்ச் மருத்துவர்கள் அந்த இடத்திற்கு பணிபுரிய வந்துவிடு வார்கள்.
மருத்துவக்கல்லூரிகளும், ஆண்டுதோறும் படித்து முடித்து வெளிவரக்கூடிய மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்பொழுது கட்டாய சேவையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதனால் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்களின் அரசுப்பணியிடங்கள் நிரந்தரமாக ஒழித்துக் கட்டப்பட்டுவிடும். கட்டாய சேவை மூலம் தற்காலிக அடிப்படையில் 32 ஆயிரம் மருத்துவர்களை நியமிப்பதால் ஆண்டு தோறும் மத்திய-மாநில அரசுகளுக்கு பல நூறுகோடி ரூபாய் மிச்சம்.நிரந்தர மருத்துவர்களுக்கு வழங்க வேண்டிய வேறு எந்த உரிமைகளோ, அலவன்ஸ்களோ, ஓய்வுதியமோ வழங்க வேண்டிய அவசியமும் இல்லை. இதன் மூலமும் அரசுகளுக்கு மேலும் பல கோடி ரூபாய் மிச்சம்.எனவே இது மோசமான ஏமாற்றும் செயல்தானே தவிர சேவையல்ல.
உலக வங்கியின் சிந்தனைக் குழந்தைதான் இந்தத் திட்டம்.பல கோடி ரூபாய்களை நமது மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கடனாக ஆண்டுதோறும் வழங்குகிறது உலக வங்கி. அந்தக் கடனை வட்டியோடு நாம் எந்த சிரமமுமின்றி திருப்பிசெலுத்த வேண்டும். அதற்காகவே இது போன்ற சிக்கன நடவடிக்கை யோசனைகளை உலக வங்கி நடைமுறைப்படுத்த நிர்பந்திக்கிறது.கடனைக் கொடுக்கும் பொழுதே அதை வட்டியுடன் திரும்பப் பெறுவதற்கான உத்திரவாத்ததையும் செய்து கொள்கிறது. ஆறு லட்சம் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயலாளிளை ஊதியமே இல்லாமல் மத்திய அரசு கிராமப்புறங்களில் நியமித்துள்ளது இந்த சிக்கன நடவடிக்கைக்கு மற்றொரு உதாரணமாகும்.
மருத்துவ மாணவர்கள் இத்திட்டத்தை எதிர்த்திட பல காரணங்கள் உள்ளன. இக்கட்டாய சேவைத் திட்டம் இளம் டாக்டர்களின் வேலை வாய்ப்பை முழுமையாக பாதிக்கும். இத்திட்டத்தின் மூலம் படிப்புக்காலம் மறைமுகமாக நீட்டிக்கப்படுகிறது..ஒரு முழுமையான மருத்துவ நிபுணராக 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இதனால் ,தாழ்த்தப்பட்டோர் ,பிற்படுத்தப்பட்டோர்,பொருளாதார ரீதியாக பின்தங்கியோர் மருத்துவக்கல்வியை படிப்பதற்கு தயங்குவர். சாதரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் படிக்க பொருளாதார ரீதியிலும் சிரமப்படுவர்.திருமணம் போன்ற காரணங்களால் பெண்களை நீண்ட காலப் படிப்பான மருத்துவக் கல்வியில் சேர்த்திட பெற்றோர் தயங்குவர். இதனால் வசதி படைத்த ஆண்கள் மட்டுமே படிக்கும் துறையாக மருத்துவக்கல்வி மாறிவிடும்.இது சமூக நீதிக்கும் பெண்களின் உயர்கல்விக்கும் எதிரானதாகும்.எனவே தான் மாணவர்கள் இத்திட்டத்தை எதிர்க்கின்றனர்.
முதுநிலை மருத்துவக்கல்வி முடித்தவுடன் 3 ஆண்டுகள் கட்டாய சேவை செய்ய வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே தமிழகம் போன்ற பல மாநிலங்களில் நடை முறையில் உள்ளது.இந்நிலையில் எம்.பி.பி.எஸ் முடித்தவுடனும் ஓராண்டு கட் டாய சேவையை செய்ய வேண்டும் வன்பது கூடுதல் சிரமத்தைக் கொடுக்கும். எல்லாவகை கட்டாய சேவைகளும் ஒழிக்கப்பட வேண்டும்.
கிராமப்புற சேவை என்பது தமிழகம் போன்ற மாநிலங்களுக்குப் புதிதல்ல. அரசுப்பணிக்கு தமிழகத்தில் கடும் போட்டியுள்ளது.புதிதாக பணியில் சேர்பவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் பணிநியமனம் செய்யப்படுகிறார்கள். ஓராண்டு நிறைவு பெற்றப்பிறகுதான் வேறு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக்கூட இடமாறுதல் பெறமுடியும். மூன்றாண்டுகள் கிராமப்புற சேவையை முடித்தவர்களுக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக் கல்வி பயில வாய்ப்புத் தரப்படுகிறது. இவ்வாண்டு அது இரண்டாண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.இது கிராமப்புற சேவை யை ஊக்குவிக்கும்.இதுபோன்று ஏனைய மாநிலங்களும் செய்யலாம்.
கிராமப்புற சேவைவையை முடித்தால் முதுநிலை மருத்துவக் கல்வி வாய்ப்பு வழங்கப்படும் என ஆசைவார்த்தை காட்டப்படுகிறது.ஆனால் அதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை. உதாரணத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் இரண்டாண்டு சேவையை முடித்தவுடனேயே மருத்துவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவக் கல்வி பயில வாய்ப்பளிக்கப்படும் ,ஆண்டொண்றிற்கு 2 மதிப்பெண்கள் வீதம் 4 மதிப்பெண்கள் நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணுடன் சேர்க்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.இதனால் பல ஆண்டுகளாக இருந்த காலிப்பணியிடங்கள் எல்லாம் நிரம்பின.
அரசின் உத்தரவை நம்பி பணியில் சேர்ந்த அவர்கள் இரண்டாண்டு சேவையை முடித்தப் பின்னரும் கூட முதுநிலை மருத்துவக் கல்வி பயில விண்ணப்பிக்க முடியவில்லை. தற்காலிக அடிப்படையில் அவர்களை நியமித்த அரசு டி.என்.பி.எஸ்.சி சிறப்புத்தேர்வை உடனடியாக வைத்து பணிவரன் முறை வழங்காததே இதற்குக் காரணம். இதே போல் காலமுறை ஊதியத்தில் பணியாற்றிய 1500 ஒப்பந்த டாக்டர்களும் 3 ஆண்டு கால அரசுப்பணிக்குப் பிறகு கூட முதுநிலை மருத்துவக் கல்வி பயில விண்ணப்பிக்க முடியவில்லை..டி.என்.பி.எஸ்.சி சிறப்புத்தேர்வை உடனடியாக வைக்காததே இதற்குக் காரணம்.பணியைச் செய்தாலும் உரிய பலனை பெற முடியவில்லை. நமது மருத்துவத்துறை குளறுபடிகளே இதற்கெல்லாம் காரணம்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அகில இந்திய தொகுப்பில் 3000 முதுநிலை மருத்துவக் கல்வி இடங்கள் உள்ளன. மத்திய அரசு மருத்துவர்களுக் குக்கூட இத்தொகுப்பிலோ,மத்திய அரசின் மருத்துவக்கல்வி நிறுவனங்களிலோ இட ஒதுக்கீடு இல்லை.மத்திய-மாநில அரசு மருத்துவமனைகளில் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கினால் அரசுப்பணியில் கிராமப்புற சேவை செய்ய மருத்துவரகள் முன்வருவார்கள்.சேவை செய்யும் மருத்துவர்களுக்கு எதையும் செய்ய முன்வராத டாக்டர் அன்புமணி ராமதாஸ் கட்டாய சேவையைப்பற்றி பேசுவது நகைப்புக்குரியது.
தமிழகம் போன்ற மாநிலங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள ரயில்வே,ஈ.எஸ்.ஐ,மத்திய அரசு மருத்துவமனைகள் மற்றும் பொதுத்துறை மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் வழங்கி வந்த முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களை தமிழக அரசு திடீரென ரத்து செய்துவிட்டது.இது சரியல்ல.
தமிழகத்தில் உள்ள நடைமுறையை பிறமாநிலங்களும் கடைபிடிக்கலாம்.இங் குள்ள குறைபாடுகளும் சரி செய்யப்பட வேண்டும்.டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதுநிலை மருத்துவக் கல்வி பயில வாய்ப்பளிக்கப்படுகி றது.இதை மாற்றவேண்டும். டாக்டர்கள் பணிநியமனத்திற்கென தனி வாரியம் அமைத்து வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் இடஒதுக்கீட்டையும் அமல்படுத்தி நிரந்தர அடிப்படையில் மருத்துவர்களை நியமித்தால் இக்குறைபாட் டையும் களைய முடியும். மலைப்பகுதிகள்,பாலைவனம்,மற்றும் மிகவும் கடினமான பிரதேசங்களில் பணிபுரியம் டாக்டர்களுக்கு கூடுதல் ஊதியத்துடன், இதர வசதிகளும் வழங்கிடவேண்டும்.இதுபோன்ற பகுதிகளில் பணியாற்ற விருப்பமுள்ள ஓய்வு பெற்ற அனுபவமுள்ள மருத்துவர்களை நியமிக்கலாம்.கிராமப்புற மருத்துவ மனைகளின் வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
பல்வேறு மாநிலங்களில் கிராமப்புற மருத்துவ மனைகளில் மருத்துவர்கள் பணியில் சேர தயங்கினால் அவற்றிற்கான அடிப்படைக் காரணங்களை கண்டு போக்க வேண்டும்.பணிநேரத்தில் மருத்துவர்கள் பணியில் இல்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்டாய சேவை திட்டத்தால் அனுபவமில் லாத டாக்டர்களே தொடர்ந்து சாதா ரண மக்களுக்குக் கிடைப்பார்கள் .இதனால் மக்களுக்கும் பெரிய பயனில்லை..
கிராமப்புற மக்களைப்பற்றி அரசுக்கு உண்மையில் அக்கறை இல்லை.கிராமப்புற மக்கள் நலனுக்காக கட்டாய சேவை எனக்கூறும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மாவட்ட அரசு மருத்துவ மனைகளை தனியார் நிறுவனங்களுக்கு மருத்துவக்கல்லூரிகளை தொடங்குவதற்காக வழங்கிட முயல்வது ஏன்?நோயாளி நலச்சங்கங்கள் மூலம் கிராமப்புற அரசு மருத்துவ மனைகளைக்கூட தனியார் மயமாக்குவது ஏன்? அரச மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை நோயாளிகளிடம் பரிசோதனைகளுக்கும்-சிகிச்சைகளுக்கும் கட்டணங்கள் வசூலிப்பது ஏன்? உலகவங்கியின் நிர்பந்தம்தானே இதற்குக் காரணம்.இல்லை என்று மறுக்க முடியுமா?
இன்று நமக்கு 6 லட்சம் மருத்துவர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இந்நிலையில் இந்தியாவை உலக சுற்றுலாமையமாக மாற்றுவதாலும்,நகர்புற கார்ப்பரேட் மருத்துவ மனைகளை ஊக்கப்படுத்துவதாலும்,அரசு மருத்துவமனைகளை விட கார்ப்பரேட் மருத்துவமனைகளில் ஊதியம் அதிகம் என்பதாலும் இளம் டாக்டர்கள் கிராமப்புறங் களுக்குப் போகத்தயங்குகின்றனர். இதற்கும் மத்திய அரசின் தவறான நலவாழ்வுக் கொள்கையேக் காரணம்.எனவே இக்குறைபாடு போக்கப்படவேண்டும்.
மக்கள் நல் வாழ்வுத் துறைக்கு அரசால் தற்பொழுது ஒதுக்கப்படுகிற நிதி உள்நாட்டு மொத்த உற்பத்தியியில் 1 விழுக்காடு தான.இது 5 விழுக்காடாக உயர்த்தப்பட வேண்டும். மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்க உடனடியாக 250 மருத்தவக்கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும்.
பல்வேறு வசதி வாய்ப்புகளில் கிராமப்புற- நகர்புற ஏற்றத்தாழ்வுகளைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிராமப்புற வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இவற்றை எல்லாம் செய்யாமல் கட்டாய கிராமப்புற சேவை என்ற பெயரில் இளம் டாக்டர்களை துன்புறுத்தல் கூடாது.அமைச்சர் அன்புமணி உணர்வாரா?
---------------------------------