சென்னை, மார்ச் 31: விழுப்புரத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. இன்னும் ஓரிரு வாரத்தில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறினார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர் செல்வம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் இத் தகவலைத் தெரிவித்தார்.
மக்கள் நல்வாழ்வுத் துறையில் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருக்கும் திட்டங்களை அவர் சுட்டிக்காட்டி எப்போது நிறைவேற்றப்படும் என்று கேள்வி எழுப்பினார்.
இந்த பட்ஜெட்டில் திருவாரூர் மற்றும் தருமபுரியில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த பட்ஜெட்டில் விழுப்புரத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அங்கு மருத்துவக் கல்லூரி அமைக்க இன்று வரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பன்னீர் செல்வம் கூறினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ராமச்சந்திரன் விழுப்புரம் மாவட்டத்தில் இடம் தேர்வு செய்வதில் சற்று தாமதம் ஏற்பட்டுவிட்டது. தற்போது இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. விழுப்புரம் மாவட்ட மருத்துவமனை டிஎம்எஸ் நிர்வாகத்திலிருந்து டிஎம்இ நிர்வாகத்துக்கு மாற்றப்பட்டு விட்டது. மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்னும் ஓரிரு வாரங்களில் நடைபெறும்.