கட்டாய கிராமப்புற மருத்துவ சேவை
ஜி.ஆர்.ரவீந்திரநாத்
"கிராமப் பகுதிகளில் பணியாற்ற டாக்டர்கள் மறுக்கிறார்கள் என்ற காரணத்தைக் கூறி' எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவுடன் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் கட்டாய சேவைசெய்ய வேண்டுமென மத்திய அரசு சட்டம் கொண்டு வரவுள்ளது. இந்தச் சேவையை முடித்த பிறகுதான் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டு தொழில் செய்ய முடியும். இதற்கேற்ப எம்பிபிஎஸ் படிப்புக் காலத்தை ஐந்தரை ஆண்டுகளில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தவும் மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
இச்சட்டம் இளம் டாக்டர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதோடு நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்கள் மருத்துவம் பயில்வதைத் தடுத்துவிடும். நமது மருத்துவக் கல்வி, மருத்துவத் துறை, மக்கள் நல்வாழ்வுக் கொள்கை ஆகியவற்றில் உலக வங்கியின் விருப்பங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களிலும் 70 சதவீத மருத்துவர்கள் நகர்ப்புறங்களிலும் இருப்பது வருந்தத்தக்கது. இதற்கு நமது சமூகப் பொருளாதார நிலைமைகளே காரணம். இந்தியாவில் 3,043 சமுதாய மருத்துவ மையங்களும் 22,842 ஆரம்ப சுகாதார மையங்களும் 1, 37, 311 துணை மையங்களும் உள்ளன என்று 2003-ம் ஆண்டு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 13.3% மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சமுதாய மருத்துவமனைகளில் 48.6% அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள், 47.9% மகப்பேறு மருத்துவர்கள், 46.1% பொது மருத்துவர்கள், 56.9% குழந்தை மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கிராமப் புறங்களில் 75% அறுவைச் சிகிச்சை மருத்துவர்களும் 73% மகப்பேறு மருத்துவர்களும் 86% குழந்தை மருத்துவர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுகள் அக்கறை காட்டாததும் பணி நியமனத் தடை ஆணையும்தான் இந்த நிலைக்குக் காரணம்.
நிரந்தர வேலைவாய்ப்பை வழங்காமல், ஒப்பந்த அடிப்படையில் தாற்காலிகமாக மிகக்குறைந்த தொகுப்பூதியத்தில் மருத்துவர்களை நியமிப்பதால் மருத்துவர்கள் அரசுப்பணிகளில் சேரத் தயங்குகின்றனர்.
கிராமப்புற மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்தாததும் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் தங்க குறைந்தபட்ச வசதிகளைக்கூட செய்து கொடுக்காததும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. பல சமுதாய மருத்துவ மையங்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சொந்தக் கட்டடமே இல்லை. நூற்றுக்கணக்கான மையங்களில் கழிப்பிட வசதியே இல்லை.
கிராமப்புற மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்க கட்டாய கிராமப்புற சேவைதான் தீர்வு என்கிறது அரசு. கட்டாய கிராமப்புற சேவை பயனளிக்காது என்பதோடு, மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடும் என்பதுதான் இளம் மருத்துவர்களின் எதிர்வாதம்.
மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் வெறும் 0.9% மட்டும் ஒதுக்கப்படுகிறது. உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மிகக் குறைவாக நிதிஒதுக்கீடு செய்யும் நாடு இந்தியாதான். மொத்த உற்பத்தியில் 5% ஒதுக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், ஊரகப்புற மருத்துவமனைகளுக்கு அதிகநிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மருத்துவம் தனியார் மயம் ஆவதும், பெரிய நிறுவனங்களாவதும் மருத்துவர்களை நகரங்களிலேயே குவியச் செய்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
1980-களில் 57% ஆக இருந்த தனியார் மருத்துவமனைகள் 2000-ல் 73% ஆக உயர்ந்துள்ளது. 1980களில் மக்களின் ஒட்டுமொத்த மருத்துவச் செலவில் அரசின் பங்களிப்பு 22% ஆக இருந்தது. இன்று 16% ஆகக் குறைந்துவிட்டது.
மருத்துவர்களை நிரந்தர ஊழியர்களாகப் நியமித்து கிராமப்புறங்களில் 2 ஆண்டு கட்டாய சேவை செய்த பின்னரே பணிவரன்முறை செய்யப்படும் என்ற நடைமுறையைக் கொண்டு வரவேண்டும். டாக்டர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. டாக்டர்களின் ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும்.
கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றுவோருக்குக் கூடுதல் சம்பளமும் பதவி உயர்வில் முன்னுரிமையும் இதர சலுகைகளும் வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவம் பயில நுழைவுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். மிகவும் பின்தங்கிய மலைப்பகுதிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கலாம். இத்தகைய மருத்துவமனைகளில் மருத்துவர்களை பணியமர்த்த தனியாகவே சிறப்புப் பணி நியமன முறையைக் கையாளலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இடமாறுதல் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் உள்ளூர் மருத்துவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கலாம். ஒழுங்காகப் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.
ஊழல் முறைகேடுகளை ஒழிக்க அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். கட்டாய கிராமப்புறச் சேவையில் எம்பிபிஎஸ் முடித்த டாக்டர்களை பணியாற்ற வைப்பதால் மக்களுக்கு பெரிய அளவில் பயனில்லை. அரசின் புள்ளிவிவரப்படியே மகப்பேறு, குழந்தைகள்நல, பொது மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களின் பற்றாக்குறையே கிராமப்புறங்களில் உள்ளது. இதற்கு முதுநிலை படிப்பு படித்த டாக்டர்கள்தான் கிராமப் பகுதிகளுக்கு அதிகம் தேவைப்படுகின்றனர்.
இக்குறைபாட்டைப் போக்க இப்படிப்புக்கான இடங்களை அதிகப்படுத்த வேண்டும். எம்பிபிஎஸ் படித்த டாக்டர்களுக்கு குறிப்பிட்ட துறைகளில் பயிற்சியளித்து அவர்களைப் பயன்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் பட்டயப் படிப்பு படிக்கும் தனியார் மருத்துவர்களை ஓராண்டு காலம் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் முழு ஊதியத்துடன் பணியாற்றச் செய்ய வேண்டும். சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை சரி செய்யப்பட்டதும் இந்தக் கட்டாயச் சேவையைக் கூட ரத்து செய்ய வேண்டும்.
தற்சமயம் ஆண்டுதோறும் இந்தியாவில் 29, 500 டாக்டர்கள் படித்து முடித்து வெளிவருகிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 40 ஆயிரம் ஆகஉயர்ந்துவிடும். ஒவ்வோராண்டும் இவர்களைக் கட்டாய கிராமப்புறச் சேவையில் தாற்காலிகமாகப் பணியமர்த்தினால் அது 40 ஆயிரம் டாக்டர்களுக்கான பணியிடங்களை நிரந்தரமாக ஒழித்துக் கட்டிவிடும். மேலும் இந்த திட்டத்துக்கான எம்பிபிஎஸ் படிப்பை ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவது சரியல்ல. ஒரு நபர் எம்பிபிஎஸ் படிப்பைத் தொடங்கி எந்தவிதமான தடங்கலும் இன்றி எம்சிஎச், டிஎம் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர்ச்சியாகப் படித்து முடிக்க குறைந்தபட்சம் 13 ஆண்டுகளாவது அவசியம்.
எம்பிபிஎஸ் படிப்பு காலத்தை ஆறரை ஆண்டுகளாக உயர்த்தினால் அது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் மருத்துவம் பயிலும் ஆர்வத்தைக் குறைத்துவிடும். திருமணம் போன்ற காரணங்களால் பெற்றோர்கள் பெண்களை மருத்துவ படிப்புக்கு அனுப்பத் தயங்குவர். பணபலம் உள்ள ஆண்கள் மட்டுமே படிக்கும் துறையாக மருத்துவக் கல்வி மாறிவிடும்.
தற்பொழுது பிளஸ்2வில் உயிரியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இவ்வாண்டு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்த பலர், பொறியியல் படிப்புக்கு மாறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்களின் வேலைவாய்ப்பை, உரிமைகளைப் பாதிக்காத வகையில் கிராமப்புற மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளை நிறைவு செய்ய ஆக்கப்பூர்வமாக அரசு முயலவேண்டும்.
(கட்டுரையாளர், சமூக சமதுத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலர்.)
(தினமணியில் எழுதியது)