திருச்சியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி, அக். 23: மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் அளித்த உறுதிமொழியை மத்திய அமைச்சர் மீறுவதாகக் கூறி, அவரைக் கண்டித்து திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
"எம்பிபிஎஸ் படிப்புக் காலத்தை ஐந்தரை ஆண்டுகளிலிருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவது தொடர்பான பிரச்னையைத் தொடர்ந்து, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், கோரிக்கைகளை உயர்நிலைக் குழு அமைத்து பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.
ஆனால், தற்போது அவர் உறுதிமொழியை மீறி செயல்பட்டு வருகிறார். மேலும், தமிழக மருத்துவ மாணவர்களை வட மாநிலங்களில் கட்டாயமாகப் பணி அமர்த்தவும் முயற்சி செய்து வருகிறார்.
மத்திய அமைச்சரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து வகுப்புக்குச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் கல்லூரி வாயிலில் மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் எஸ். வரபிரசாத் ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்து, கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். கொட்டும் மழையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.